ஈழத்தின் தனிப்பெரும் விழாவான நல்லையம்பதியின் மகோற்சவப் பெருவிழாவில் சப்பரத்திருவிழா இன்று(31) வெகு விமரிசையாக நடைபெற்றது.
அகிலம் போற்றும் அலங்காரக் கந்தனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 23 ஆவது நாளுக்கான பூஜைகள் இன்று காலை முதல் நடைபெற்றன.
உலகின் விசாலமான அசையும் கட்டுமானமாய் திகழும் சப்பரத்திருவிழாவை காண உள்நாட்டிலும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்துள்ள பெருந்திரளாக பக்தர்கள் நல்லூரானின் வளாகத்தில் குழுமியிருந்தனர்.
நாள் ஒரு அழகு பெரும் நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தில் இரதோற்வ திருவிழா நாளை காலை இனிதே நடைபெறவுள்ளது.
சப்பரத் திருவிழாவும் தேர்த்திருவிழாவும் நேரடியாக சக்தி தொலைக்காட்சியில் நேரடியாக ஔிபரப்பப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நல்லையம்பதியின் பெருந்திருவிழாவை முன்னிட்டு யாழ். நல்லூர் பருத்தித்துறை வீதியிலுள்ள பாரதியார் சிலைக்கு அருகில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சக்தி ரீவி, நியூஸ் ஃபெஸ்ட் யாழ். நல்லூர் விசேட வளாகம் நேற்று(30) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
சக்தி தொலைக்காட்சியில் இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்ட தொழிநுட்பக் கருவிகள், புகைப்படக் கருவிகள் உள்ளிட்ட பல பொருட்கள் சக்தி ரீவி, நியூஸ் ஃபெஸ்ட்டின் யாழ். நல்லூர் விசேட வளாகத்தில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஊடகத் துறையில் பிரகாசிக்கும் எதிர்பார்ப்பிலுள்ள திறமையான இளைஞர், யுவதிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் அங்கு அமைக்கப்பட்டுள்ள கலையகத்தில் திரைப்பரீட்சையும், குரல் தேர்வும் இன்றும்(31),நாளையும்(01) நடைபெறுகின்றன