Colombo (News 1st) Sea Of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பின் வடக்கு கடற்பிராந்தியத்தின் நெடுந்தீவு கடற்பரப்பை அண்மித்து இந்திய மீன்படிப் படகொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார். நாட்டின் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடுவதற்காக வந்த இந்திய மீன்பிடிப் படகை சுற்றிவளைக்க முயற்சித்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார். குறித்த மீன்பிடி படகில் நால்வர் இருந்துள்ளதுடன், அவர்களில் இருவர் காயமமைடந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் தமிழகம் - இராமேஸ்வரத்தில் இருந்து வந்து நாட்டின் கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்துள்ளனர். இதனிடையே, இந்திய மீனவரின் உயிரிழப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் இராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன், இராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கடந்த ஜூன் 25 ஆம் திகதி அதிகாலையில் காங்கேசன்துறையை அண்மித்த கடற்பரப்பில் கடற்படை மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, அத்துமீறி பிரவேசித்த இந்திய மீன்பிடி படகை சோதனையிடுவதற்காக அதில் ஏற முயன்ற, கடற்படையின் விசேட படகுகள் அணியின் உறுப்பினராக கடமையாற்றி வந்த பிரியந்த ரத்னாயக்க உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.