.webp)

Colombo (News 1st) அரச விடுமுறை வழங்கப்பட்டுள்ள புதன்கிழமை தோறும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் Online ஊடாக இடம்பெறுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும், பல்கலைக்கழகங்களையோ அல்லது மாணவர் விடுதிகளையோ மூடுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆணைக்குழுவின் உப தலைவர், பேராசிரியர் வசந்த லியனகே தெரிவித்தார்.
Online ஊடாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகள் அனைத்து உப வேந்தர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
போக்குவரத்தில் ஈடுபடுவதை முடிந்தவரை குறைப்பதே நோக்கமென அவர் குறிப்பிட்டார்.
மேலும் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்யும் செயற்பாட்டை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அதன்மூலம் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்டவர்களின் பயணங்கள் குறைவடையும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் தெரிவித்தார்.
தற்போது முன்னெடுத்துச் செல்லும் கல்வி செயற்பாடுகளை உடனடியாக Online ஊடாக மாற்ற முடியாமை காரணமாக மாணவர்கள் விடுதிகளில் இருந்தவாறு கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர், பேராசிரியர் வசந்த லியனகே தெரிவித்துள்ளார்.
ஏதேனும் மாற்றம் ஏற்படுமாயின் முழுமையாக Online மூலம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என அவர் கூறினார்.
அத்துடன், பல்கலைக்கழகங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
