1,700 ரூபா சம்பளம் ; அதிவிசேட வர்த்தமானி இரத்து

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டுமென வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இரத்து

by Staff Writer 23-07-2024 | 7:56 PM

Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் வௌியிட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது. 

கடந்த மே மாதம் 21ஆம் திகதி தம்மால் வௌியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்படுவதாக தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ.விமலவீர இம்மாதம் 10ஆம் திகதியிடப்பட்ட புதிய அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டுள்ளார். 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை. 

இந்த நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாவை நிர்ணயித்து தொழில் ஆணையாளரால் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி ​வர்த்தமானியொன்று வௌியிடப்பட்டிருந்தது. 

அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சின் செயலாளர் ஆர்.பீ.ஏ.விமலவீர  மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டிருந்தார். 

இந்த வர்த்தமானியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும் விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதற்கமைய, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த மொத்தக் கொடுப்பனவாக 1,700 ரூபா கிடைக்கும் என தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சின் செயலாளர் அறிவித்திருந்தார். 

மேலதிக கொழுந்து கிலோகிராம் ஒன்றுக்கு 80 ரூபா வீதம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் மே மாதம் 21ஆம் திகதி வௌியிட்ட அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் கடந்த மே மாதம் 21ஆம் திகதி தம்மால் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானியில் வௌியிடப்பட்ட அறிவித்தல் இரத்து செய்யப்படுவதாக தெரிவித்து தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சின் செயலாளர் ஆர்.பீ.ஏ.விமலவீர மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டுள்ளார். 

தேயிலை மற்றும் இறப்பர் ஆகிய தொழில்துறைகளின் தொழிலாளர்களது குறைந்தபட்ட நாளாந்த கொடுப்பனவு தொடர்பில் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்படுவதாக அவர் தனித்தனியாக 2 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.