வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்

மீனவர் விவகாரம்: இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்

by Bella Dalima 19-06-2024 | 5:24 PM

Colombo (News 1st) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் காலாநிதி S. ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கைது நடவடிக்கைகள் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, மீனவர்களுக்கு அச்ச உணர்வும் நிச்சயமற்ற தன்மையும் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது 15 மீனவர்களும் 162 மீன்பிடிப் படகுகளும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமெனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, தமிழகம் - கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் நேற்று (18) கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த நான்கு மீனவர்களும் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.