அயர்லாந்து, ​நோர்வே தூதர்களை மீளப்பெறும் இஸ்ரேல்

அயர்லாந்து, ​நோர்வே தூதர்களை திரும்பப் பெறும் இஸ்ரேல்; ஸ்பெயினுக்கும் எச்சரிக்கை

by Bella Dalima 22-05-2024 | 3:51 PM

Colombo (News 1st) அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ​நோர்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. 

ஸ்பெயின் மற்றும் நோர்வேயுடன் இணைந்து, கூட்டாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அயர்லாந்து பிரதமர்  சைமன் ஹரிஸ் (Simon Harris) குறிப்பிட்டுள்ளார். 

இது அயர்லாந்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் வரலாற்று சிறப்பு மிகுந்த நாள் எனவும் இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலை தீர்க்க பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிப்பதே தீர்வு எனவும் அயர்லாந்து பிரதமர் கூறியுள்ளார். 

அங்கீகாரம் இல்லையெனில் அங்கு அமைதி தொடராது என நோர்வே பிரதமர் Jonas Gahr Støre தெரிவித்துள்ளார். 

இதனிடையே, அயர்லாந்து மற்றும் நோர்வேயிலிருந்து தமது தூதர்களை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் இன்று (22) அறிவித்துள்ளது. 

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் இந்த நாடுகளின் முடிவை எதிர்த்து, இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்
(Israel Katz) தங்கள் தூதர்களை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார். 

இஸ்ரேலின் இறையாண்மை மற்றும் அதன் பாதுகாப்பு குலைக்கப்படுவதை அங்கீகரிக்கும் யாரையும் இஸ்ரேல் பொருத்துக்கொள்ளாது என இஸ்ரேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார். 

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவில் ஸ்பெயினும் தொடருமானால், இஸ்ரேல் இதே நடைமுறையை பின்பற்றும் என காட்ஸ் எச்சரித்துள்ளார்.