.webp)

Colombo (News 1st) அமெரிக்காவின் U.S. News & World Report சஞ்சிகையினால் 2026ஆம் ஆண்டு ஆசியாவில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த 05 இடங்களுக்குள் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் பல்வேறு பயண அனுபவங்களை இந்த சஞ்சிகை பாராட்டியுள்ளது.
நாட்டிற்கு வருகை தருவதற்கான வசதிகள், கலாசார மற்றும் போஷாக்கான உணவு முறைமை, சுற்றுலா தலங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தெரிவுகள் ஆகிய விடயங்களை ஆராய்ந்து இந்த தரவரிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், சிறிய தீவுக்குள் காணப்படும் கடற்கரைகள், யுனெஸ்கோ மரபுரிமை தளங்கள் மற்றும் அரிய வகை வனவிலங்குகளை பார்வையிடக்கூடிய சஃபாரி சேவை வசதிகளை அடிப்படையாக கொண்டும் தரவரிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தரவரிசைப்படுத்தலில் முதலிடத்தை ஜப்பானின் ஃபுஜி (Fuji) எரிமலையும் இரண்டாம் இடத்தை தலைநகர் டோக்கியோவும் பெற்றுள்ளன.
பிலிப்பைன்ஸின் பலாவன் (Palawan) தீவு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளதுடன், தென் கொரியாவின் சியோல் (Seoul) நகரம் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
பண்டிகை காலத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகளால் அதிகம் முன்பதிவு செய்யப்பட்ட 3ஆவது சர்வதேச பயணத் தளமாக இலங்கை காணப்படுவதாக இந்திய நிகழ்நிலை சுற்றுலா நிறுவனத்திற்கு சொந்தமான நிகழ்நிலை தளமான MakeMyTrip-இன் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மீது இந்திய சுற்றுலாப் பயணிகளின் ஆர்வம் வேகமாக அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் முதலிடத்தில் தாய்லாந்தும் இரண்டாவது இடத்தில் ஐக்கிய அரபு இராச்சியமும் பட்டியலிடப்பட்டுள்ளன.
மேம்பட்ட தொடர்புகள், எளிமைப்படுத்தப்பட்ட விசா அணுகல் முறைமை மற்றும் குறுகிய தூர இடங்களைத் தேடும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் அதிகரித்த ஆர்வம் ஆகியவற்றால் இலங்கை மூன்றாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இது இலங்கையின் சுற்றுலாத் துறையின் நிலையான மறுமலர்ச்சியை பிரதிபலிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த பட்டியலில் மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் ஹொங்கொங் ஆகிய இடங்கள் முன்னிலையில் உள்ளதாக MakeMyTrip அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
