ஈரான் அதிபரின் இறுதிப் பயணம்

ஈரான் அதிபரின் இறுதிப் பயணம்; பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி

by Bella Dalima 21-05-2024 | 5:02 PM

Tabriz: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி, வௌிவிவகார அமைச்சர் ஹொசைன் அலி அப்துல்ஹானியான் உள்ளிட்ட 7 பேரினதும் ஜனாஸாக்களை நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

ஈரானின் தப்ரிஸில் (Tabriz) ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கூடி தமது மறைந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சிக்கு ( Ebrahim Raisi ) அஞ்சலி செலுத்தினர். 

மறைந்த அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் உடல் அவரது பிறந்த இடமான Mashhad-இல் நாளை மறுதினம் (23) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு ஈரானின் தென்மேற்கு நகரான Tabriz இல் முதலாவது இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து ஈரானின் புனித நகரான Qom நகருக்கு ஜனாஸாக்கள் கொண்டு செல்லப்படவுள்ளன. 

ஈரானில் ஐந்து நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 

ஈரானில் உள்ள மலைப் பகுதியில் இராணுவ ஹெலிகாப்டர் வீழ்ந்து நொறுங்கி விபத்திற்குள்ளானதில், அந்நாட்டு அதிபர் சையது இப்ராஹிம் ரெய்சி (63) உயிரிழந்தார்.

ஹெலிகாப்டரில் உடன் சென்ற வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட 8 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

ஈரான் - அசர்பைஜான் இடையே அராஸ் நதியின் குறுக்கே இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணை ஒன்றின் திறப்பு விழாவில் பங்கேற்று விட்டு கோமர்லு நகரில் இருந்து ஈரானின் Tabriz நகருக்கு அதிபர் உள்ளிட்டோர் 3 இராணுவ ஹெலிகாப்டர்களில் புறப்பட்டனர்.

இதன்போது ஏனைய இரண்டு ஹெலிகாப்டர்களும் தரையிறங்கிய போதும், அதிபர் ரெய்சி, வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகாப்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் நொறுங்கிக் கிடப்பதை துருக்கியின் ட்ரோன் நேற்று முன்தினம் (19) இரவு கண்டுபிடித்தது. 

பின்னர், ஹெலிகாப்டரில் பயணம் செய்த அதிபர் உள்ளிட்ட அனைவரும் விபத்தில் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டது.