Colombo (News 1st) மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கு இன்று யாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாகாண மேல் நீதிமன்றத்தில் நீதிபதி D.S.சூசைதாசன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்டனர்.
சாட்சிகள் நெறிப்படுத்தலில் முதலாவது நேரிற்கண்ட சாட்சியாளரான நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சாட்சியமளித்தார்.
சாட்சியினை அரச தரப்பு சட்டத்தரணி நாகரட்ணம் நிஷாந்தன் நெறிப்படுத்தினார்.
2017 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி யாழ். நல்லூர் சந்தியில் வைத்து, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது, நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஓருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், மற்றைய பாதுகாவலர் காயமடைந்தார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் 2017 ஆம் ஆண்டு புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தார்.
இந்த காலப்பகுதியிலேயே தன் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது தெரிவித்தார்.
இதன் போதே தனது மெய்ப்பாதுகாவலர், எதிரிக் கூண்டில் நிற்கும் எதிரியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக, சாட்சியாளரான மா. இளஞ்செழியன் அடையாளம் காண்பித்தார்.
வழக்கின் இரண்டாவது சாட்சியாளரான, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் மெய்ப்பாதுகாவலரும் இன்று சாட்சியமளிக்க வருகை தந்தார்.
இரண்டாவது சாட்சியின் சாட்சியத்தை நாளை (25) வரை ஒத்திவைத்து மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி D.S.சூசைதாசன் உத்தரவிட்டார்.
இதற்கிணங்க, இந்த வழக்கு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.