ஹமாஸ் தலைவரின் 3 மகன்கள், பேரன்கள் பலி

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் 3 மகன்கள், பேரன்கள் பலி

by Bella Dalima 11-04-2024 | 5:06 PM

Colombo (News 1st) ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் (Ismail Haniyeh) மூன்று மகன்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்த தகவலை ஹமாஸ் அமைப்பின் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.  

மூன்று மகன்களுடன் மூன்று பேரன்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஷாதி முகாமில் இருந்தபோது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் அவர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. 

மகன்கள், பேரன்கள் பலியான தகவலை ஹமாஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவிடம் சொல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோ பலராலும் பார்க்கப்பட்டுள்ளது. 

இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில், அதுவும் ரமழான் தினத்தில் தனது மூன்று மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் கொல்லப்பட்டது தொடர்பான தகவல் இஸ்மாயில் ஹனியேவிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ X பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

நாடு கடத்தப்பட்டு தற்போது அவர் கத்தாரில் வசித்து வரும் நிலையில், கத்தாரில் காயமடைந்த பாலஸ்தீனியர்களைக் காண மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, அவரிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, அவர் ஒரு விநாடி மௌனமாக இருந்துவிட்டு, பிறகு இறைவன் திருவடியைச் சேரட்டும் என்று பிரார்த்தித்தவாறு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

இந்த தாக்குதலில், அவரின் மூன்று பேத்திகளும் பேரன்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.