நால்வரைக் கொன்ற மாணவனின் பெற்றோருக்கு 10 வருட சிறை

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தி நால்வரைக் கொன்ற மாணவனின் பெற்றோருக்கு 10 வருட சிறைத்தண்டனை

by Bella Dalima 10-04-2024 | 4:57 PM

Michigan: அமெரிக்க பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தி நான்கு மாணவர்களைக் கொன்ற Ethan Crumbley என்ற மாணவனின் பெற்றோருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் மிச்சிகனில் (Michigan) உள்ள  ஒக்ஸ்போர்ட் உயர்நிலை பாடசாலையில் (Oxford High School) கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி ஈதன் கிரம்ப்ளே என்ற 15 வயது மாணவன் துப்பாக்கிச்சூடு நடத்தினார். 

இதில் Tate Myre (16), Hana St Juliana (14), Madisyn Baldwin (17) மற்றும் Justin Shilling (17) ஆகிய நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர். 

இந்த வழக்கில், தற்போது 17 வயதாகும் ஈதன் கிரம்ப்ளேவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனிடையே,  ஈதனின் தந்தை James Crumbley மற்றும் தாய் Jennifer Crumbley ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. 

மகனை சரியாக கவனிக்கவில்லை என்றும் அவர்களது அலட்சியத்தால் ஈதன் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

விசாரணையின் போது, புதிதாக வாங்கிய துப்பாக்கியை வீட்டில் பத்திரப்படுத்தவில்லை என்றும், தங்கள் மகனின் மனநலம் மோசமடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டும் அதனை அலட்சியப்படுத்தியதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வீட்டில் பாதுகாப்பற்ற துப்பாக்கி இருந்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் மாணவன் ஈதன் தனது வீட்டு பாடத்தின்போது ஒரு துப்பாக்கி, ஒரு தோட்டா, காயமடைந்த நபரின் படங்களை வரைந்துள்ளார். இதையும் பெற்றோர் கவனிக்க தவறிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இவ்வழக்கில் James Crumbley மற்றும் Jennifer Crumbley ஆகியோருக்கு  தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தடுக்கக்கூடிய வாய்ப்புகளை பெற்றோர் தவறவிட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.