மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்து 94 பேர் பலி

மொசாம்பிக்கில் கொலரா அச்சம் காரணமாக தப்பிச்செல்ல முயன்றபோது படகு கவிழ்ந்து 94 பேர் பலி

by Bella Dalima 09-04-2024 | 4:24 PM

Mozambique: தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் (Mozambique) மீன்பிடிப் படகில் பயணித்த 94 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

வடக்கு கடற்கரை வழியாக ஒரு மீன்பிடி படகில் நேற்று சுமார் 130 பேர் பயணம் செய்துள்ளனர். 

நம்புலா (Nampula) மாகாணத்திலிருந்து தீவை நோக்கி அந்தப் படகு பயணித்துக்கொண்டிருந்த போது, எடை தாங்காமல் படகு மூழ்கியுள்ளது. 

அதிகம் பேர் ஒரே படகில் பயணித்ததாலும், படகு மோசமான நிலையில் இருந்ததாலும் இந்த விபத்து இடம்பெற்றதாகவும் விபத்தில் 94 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர். 

நம்புலா மாகாணத்தில் கொலரா (Cholera) பரவுவதாக தகவல் கிடைத்ததால், அச்சத்தில் அங்கிருந்து படகு மூலம் தப்பிச்செல்ல முயன்றவர்களே அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர். 

இது தொடர்பாக விசாரணைக்குழு அமைத்து, விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.