பழம்பெரும் நடிகர் அடடே மனோகர் காலமானார்

பழம்பெரும் நடிகர் அடடே மனோகர் காலமானார்

by Bella Dalima 28-02-2024 | 3:38 PM

Colombo (News 1st) பழம்பெரும் நடிகர் 'அடடே' மனோகர் காலமானார். 

சென்னையை சேர்ந்த இவர் திரைப்படங்கள், சின்னத்திரை மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார். 

மனோகர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய போதும், நாடகங்களில் நடித்து வந்தார். 

சுமார் 3,500-க்கும் மேற்பட்ட முறை மேடை நாடகங்களில் நடித்துள்ளதாகவும் 6 நாடகங்களை இவரே இயக்கி நடித்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

வானொலி மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை எழுதியும், நடித்தும் உள்ள இவர், கிட்டதட்ட 15 தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

'அடடே மனோகர்’ என்ற பெயரில் 1986 மற்றும் 1993-ஆம் ஆண்டில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நாடகம் வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 35-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 
நடிகர் வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் இவர் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்திருக்கிறார். 

S.V.சேகர், கிரேஸி மோகன் ஆகியோரின் நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். 

சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, கையளவு மனசு, நிம்மதி உங்கள் சாய்ஸ், ரமணி வெர்சஸ் ரமணி, பிரேமி, ரயில் சிநேகம், வண்ணக்கோலங்கள் என்பன இவர் நடித்த சில முக்கிய நாடகங்கள் ஆகும். 
 
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர், நேற்று இரவு காலமானார்.