ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்திய மீன் இனம்

துப்பாக்கிச்சூட்டிற்கு நிகராக ஒலி எழுப்பும் சிறிய வகை மீன் இனம்; ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்திய டேனியோனெல்லா செரிப்ரம்

by Bella Dalima 27-02-2024 | 3:31 PM

Colombo (News 1st) டேனியோனெல்லா செரிப்ரம் (Danionella Cerebrum) எனும் மிகச் சிறிய வகை மீன் மிகப்பெரிய ஒலியை எழுப்புவதை பெர்லின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

ஆய்வகத்தில் இருந்த மீன் தொட்டியில் இருந்து, விநோதமான சத்தம் வருவதை அறிந்த ஆய்வாளர்கள் அது பற்றி ஆராயத் தொடங்கினர். 

இதனையடுத்து, டேனியோனெல்லா செரிப்ரம் எனும் மீன்கள் அவற்றின் swim bladder மூலம் சக்திமிக்க சீரான ஒலியை உண்டாக்குவது தெரியவந்தது. 

டெனியோனெல்லா மீன்களின் உடல் கண்ணாடி போன்று ஒளி ஊடுருவும் தன்மை (Transparent) கொண்டவை என்பதால், அவை உயிருடன் இயங்கும் போதே ஆய்வுகளை மேற்கொள்வது ஆய்வாளர்களுக்கு எளிதாக இருந்தது. 

இந்த மீன் வெளிப்படுத்தும் ஒலியின் அளவு மீன் தொட்டியின் நீர் நிலைகளில் 140 டெசிபல் (decibel) என பதிவாகியுள்ளது. இது ஒரு துப்பாக்கிச்சூட்டின் ஒலிக்கு நிகரானது. 

12 மில்லிமீட்டர் நீளம் மட்டுமே உள்ள இந்த டெனியோனெல்லா மீன் எழுப்பும் ஒலிதான் உலகின் அனைத்து வகை மீன் இனத்திலும் எழுப்பப்படும் அதிகமான ஒலியாகும்.

தொடர்பாடலுக்காக இந்த மீன் இனம் சத்தம் எழுப்புவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

இயற்கையின் படைப்புகளில் பெரிய விலங்குகள் அதிக ஒலி எழுப்புவது இயல்பு. என்றாலும், தண்ணீருக்கு அடியில் கதை வேறு விதமானது. மிகச்சிறிய உயிரினங்கள் கூட அதிக ஒலியை எழுப்புகின்றன. 

Pistol Shrimp எனப்படும் இறால் வகை நீர்வாழ் உயிரினம் மற்ற உயிரினங்களை வேட்டையாடும் போது,  சுமார் 200 டெசிபல் வரை அதிக சத்தம் எழுப்பும் என்பதை விஞ்ஞானிகள் அறிந்திருக்கிறார்கள்.

மிகச் சிறிய வகை மீன் மிக அதிக ஒலியை எழுப்பும் வினோதம், ஆராய்ச்சியாளர்களை மட்டுமின்றி கடல்வாழ் உயிரின ஆர்வலர்களுக்கும் சுவாரஸ்யமான செய்தியாக உள்ளது.

இது குறித்து மேலும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.