Balochistan: பாகிஸ்தானில் நாளை (08) பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இருவேறு குண்டுவெடிப்புகளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பிஷின் (Pishin) மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் கட்சி அலுவலகம் முன்பாக இடம்பெற்ற முதல் குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, இரண்டாவது குண்டுவெடிப்பு Qillah Saif Ullah மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டு குண்டுவெடிப்புகளிலும் பலர் காயமடைந்துள்ளனர்.
Quetta நகரிலிருந்து 50 கிமீ தொலைவிலும், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு தென்கிழக்கே 100 கிமீ தொலைவிலும் உள்ள பிஷினில் நடந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. 25 பேர் காயமடைந்துள்ளதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது குண்டுவெடிப்பு பற்றிய விபரங்கள் அதிகம் வெளிவரவில்லை. JUI-F கட்சியின் தேர்தல் அலுவலகத்தை குறிவைத்து Qillah Saif Ullah பகுதியின் சந்தையில் இது நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்புக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என பலுசிஸ்தான் மாகாண அரசு தெரிவித்துள்ளது.