செங்கடலில் பாதுகாப்புப் பணியில் களமிறங்கும் EU

செங்கடலில் பாதுகாப்புப் பணியில் களமிறங்கும் ஐரோப்பிய ஒன்றியம்

by Bella Dalima 01-02-2024 | 4:08 PM

Colombo (News 1st) சர்வதேச வணிக போக்குவரத்தில் முக்கிய வழித்தடமாகவுள்ள செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. 

ஹமாஸ் அமைப்பினரைத் தாக்கி வரும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் ஹமாஸிற்கு ஆதரவு தெரிவித்தும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். 
 
இந்த தாக்குதலை முறியடிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக இணைந்து செங்கடலில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இருந்த போதிலும் கடந்த வாரம் ஏடன் வளைகுடாவில் அமெரிக்காவின் போர்க்கப்பலை தாக்க முயன்றனர். இங்கிலாந்து கப்பல் மீதும் தாக்குதல் நடத்தினர். இதற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இணைந்து இராணுவ நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் செங்கடலில் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது. 
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக உலகளாவிய ரீதியில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதால், ஐரோப்பிய ஒன்றியம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. 
 
பெப்ரவரி 17 ஆம் திகதிக்குள் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வௌியுறவு கொள்கைகளுக்கான பிரதானி Josep Borrell தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் உளள ஏழு நாடுகள் கப்பல்கள் மற்றும் விமானங்களை வழங்க தயாராக உள்ளன. பெல்ஜியம் ஏற்கனவே போர்க்கப்பல்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. ஜெர்மனியும் போர்க்கப்பல்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலையில், இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டோம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.