இரண்டு உப குழுக்கள் நியமனம்

சுகாதார அமைச்சில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய இரண்டு உப குழுக்கள் நியமனம்

by Staff Writer 22-09-2023 | 4:05 PM

Colombo (News 1st) சுகாதார அமைச்சில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய அரச கணக்குகள் தொடர்பிலான தெரிவுக்குழுவினால் (COPA) இரண்டு உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அரச கணக்குகள் தொடர்பிலான தெரிவுக்குழு, அதன் தலைவர் லசந்த அழகியவண்ண தலைமையில் கூடியது.

இதன்போது, மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்து கொள்முதல் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை முன்வைக்க பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில் உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக டயானா கமகே, அசோக்க அபேசிங்க, ஜயந்த கெட்டகொட மற்றும் அருணி அமரசூரிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இ​தேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தலைமையில் மற்றுமொரு உப குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த உப குழுவில் இசுரு தொடங்கொட, விமலவீர திசாநாயக்க, மஞ்சுலா திசாநாயக்க, வீரசுமன வீரசிங்க மற்றும் முதிதா பிரஷாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு உப குழுக்களிலும் COPA குழுவின் எந்தவொரு உறுப்பினரும் பங்குபற்ற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுகாதார அமைச்சின் அனுமதியளிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அதிகாரிகளால் வழங்கப்பட்ட பதில்கள் திருப்தி அளிக்கவில்லையென அரச கணக்குகள் தொடர்பிலான தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான தரவுக்கட்டமைப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.