.webp)
Colombo (News 1st) நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில், பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான ஆட்சேபனைகளை தெரிவிக்க அவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்துள்ள குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனு தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின், எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அதனை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதியான ரொஷான் ரணசிங்கவிற்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இந்த மனு ஜனவரி 3 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வௌியிட்டதாக தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.