.webp)
Colombo (News 1st) இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் Paris Club உள்ளிட்ட இலங்கையின் வௌிநாட்டு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ சங்கம் ஏற்படுத்திக்கொண்டுள்ள கொள்கை ரீதியான இணக்கப்பாட்டிற்கு அமைவாக 5.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி மீளாய்வு செய்யப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த இணக்கப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் விடயங்கள், எதிர்காலத்தில் விரிவாக தௌிவுபடுத்தப்படுமென நிதியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கொள்கை ரீதியிலான இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் Paris Club உள்ளிட்ட இலங்கைக்கான கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ சங்கம் நேற்று (29) அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்த இணக்கப்பாடானது எதிர்காலத்தில் கடன் வழங்குநர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் இருதரப்பு உடன்பாட்டின் ஊடாக அவர்களின் சட்ட மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படுமென நிதியமைச்சினால் வௌியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் நிதியமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இணக்கப்பாடும் கடந்த மாதம் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன EXIM வங்கியுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடும், இலங்கையின் மொத்த இருதரப்பு வௌிநாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கு மிக முக்கியமானவையென நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்ட பின்னர் சவுதி அரேபியா, பாகிஸ்தான், குவைத் மற்றும் ஈரான் உள்ளிட்ட 274 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வர எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக இலங்கையின் திறைசேரி முறிகள் உரிமையாளர்கள் உள்ளிட்ட ஏனைய வௌித்தரப்பு வணிகக் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சமமான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் நிதியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் வழங்குநர்கள் நேற்று (29) தெரிவித்த இணக்கப்பாட்டின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கையுடன் தொடர்புடைய கடன் வேலைத்திட்டத்தில் 334 மில்லியன் அமெரிக்க டொலர் இரண்டாம் தவணைக்கான அனுமதியையும் விரைவில் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக கடன் வழங்குநர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள கொள்கை ரீதியான இணக்கப்பாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வை நிறைவு செய்ய உதவும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு, குறித்த மீளாய்வை முன்னெடுக்கவுள்ளதாக Reuters செய்திச் சேவை தெரிவித்துள்ளது.