மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ள 10 யோசனைகள்

நாட்டைக் கட்டியெழுப்ப மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ள 10 யோசனைகள்

by Bella Dalima 10-07-2022 | 3:11 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார். நாட்டில் எழுந்துள்ள மக்கள் எதிர்ப்பின் பிரகாரம், தற்போதைய ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ அதிகாரத்தில் இருப்பதற்கு அரசியல் ரீதியாக அல்லது தார்மீக ரீதியாக உரிமை இல்லை என அதில் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கை மூலம் பொறுப்பு வாய்ந்த அனைத்து தரப்பினருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 10 யோசனைகளை முன்வைத்துள்ளது. அவையாவன... 1. ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் 2. ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை, சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் 3.  உத்தேச சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களைக் கொண்ட தேசிய நிறைவேற்று சபை அல்லது தலைமைத்துவ சபை நிறுவப்பட வேண்டும் 4. தேசிய செயற்குழு அல்லது தலைமைத்துவ சபை, சிவில் செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள், தொழில் வல்லுநர்களின் உடன்பாட்டுடன் ஜனாதிபதியும் பிரதமரும் நியமிக்கப்பட வேண்டும் 5. நெருக்கடிக்கு முந்தைய நிலைக்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்வதற்கான நோக்கங்களை அடைய குறைந்த எண்ணிக்கையிலான நெருக்கடி மேலாண்மை அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும் 6. நெருக்கடி மேலாண்மை அமைச்சரவையில் அந்தந்த அமைச்சகங்களின் கீழ் அறிஞர்கள், தொழில் வல்லுநர்கள், சிவில் ஆர்வலர்களைக் கொண்ட தேசிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட வேண்டும் 7. நெருக்கடியை நிர்வகிப்பதற்கு பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, அத்தியாவசிய சேவைகள், சமூக நலன் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டம், சமூக-அரசியல் சீர்திருத்த அணுகுமுறைகளை இலக்காகக் கொண்ட ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் மிக விரைவாக செயற்படுத்தப்பட வேண்டும் 8. 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தாமதமின்றி தேவையான உகந்த திருத்தத்துடன் மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டும் 9. நெருக்கடிக்கு முன்னரான நிலைக்கு நாடு திரும்பியவுடன், தேர்தலை நடத்தி, புதிய அரசாங்கத்தை நியமிக்கும் ஜனநாயக உரிமையை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் 10. இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கும் தேவையான சட்ட மற்றும் அரசியலமைப்பு அடிப்படைகளை உருவாக்குவதற்கும், சமூக அரசியல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான கட்டமைப்பு மாற்றங்களை செய்வதற்கும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது புதிய அரசாங்கத்தின் முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும்