சுமந்திரனின் வௌ்ளவத்தை வீட்டின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் தற்கொலை

by Staff Writer 04-06-2022 | 4:03 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரனின் வௌ்ளவத்தை - ஜயா மாவத்தையிலுள்ள வீட்டின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டிற்கு அருகில் இன்று காலை 7.30 அளவில் குறித்த இராணுவ சிப்பாய் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். வலப்பனை பகுதியை சேர்ந்த 22 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார். T-56 ரக துப்பாக்கியை அவர் தற்கொலைக்கு பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனிடையே, உயிரிழந்த இராணுவ சிப்பாய் உண்மையில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், உயிரிழந்த இராணுவ சிப்பாயின் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.