சிறுமி மீது தாக்குதல்: மேலும் 2 சந்தேகநபர்கள் கைது

அம்பாறையில் சிறுமி மீது தாக்குதல்: மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது

by Staff Writer 16-03-2022 | 3:25 PM
Colombo (News 1st) அம்பாறை - பள்ளிக்குடியிருப்பு பகுதியில் 11 வயது சிறுமி தாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக்குடியிருப்பை சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே இன்று (16) முற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். சந்தேகநபர்களை அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுமி தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான சிறுமியின் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 31 வயதான குறித்த நபர் அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் தாயிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை சிறுமியொருவர் தாக்கப்பட்ட விதம் தொடர்பில் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. பிஸ்கட் பெற்றுத்தருவதாக சிறுமியின் தந்தை கடைக்கு அழைத்துச்சென்று, பிஸ்கட் பக்கெட் ஒன்றை திருடிக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது, சிலர் சுற்றிவளைத்த போது, சிறுமியை அங்கு தள்ளிவிட்டு பிரதான சந்தேகநபரான தந்தை தப்பிச்சென்றுள்ளார். தாக்குதலின் போது காயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.