9 ஆவது பாராளுமன்றத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுக்கப் போவோர் யார்?

by Bella Dalima 07-08-2020 | 9:41 PM
Colombo (News 1st) யாழ். தேர்தல் மாவட்டத்தில் 36,895 அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வெற்றி பெற்றுள்ளார். இம்முறை தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்ட மாவட்டங்களில் இருந்து கிடைத்த ஒரேயொரு ஆசனம் இதுவாகும். இலங்கை தமிழரசுக் கட்சியின் சிவஞானம் சிறிதரன் 35,884 வாக்குளையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் 27,834 வாக்குகளையும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் 23,840 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 32,156 வாக்குளைப் பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவானார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 31,658 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளதுடன், முதன்முறையாக பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் 21, 554 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு பிரவேசித்துள்ளார். வன்னி தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்ள்ஸ் நிர்மலநாதன் 25, 668 வாக்குகளையும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் 18, 563 வாக்குகளையும் பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் 15,190 வாக்குளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காதர் மஸ்தான் 13, 454 வாக்குளையும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் 28,203 வாக்குளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 11,118 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், அதில் 3,203 அதிக விருப்பு வாக்குளைப் பெற்ற குலசிங்கம் திலீபன் முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் 21,422 வாக்குகளைப் பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் எஸ்.எம்.தௌபீக் 43,759 வாக்குகளையும் இம்ரான் மஹ்ரூப் 39,029 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். மட்டக்களப்பில் அதிக விருப்பு வாக்குகளாக 54,108 வாக்குகளைப் பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் வெற்றி பெற்று முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் இராசமாணிக்கம் சாணக்கியன் 33,332 வாக்குகளையும் கோவிந்தன் கருணாகரம் 26,382 வாக்குளையும் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சதாசிவம் வியோழேந்திரன் 22,218 வாக்குகளையும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் கிழக்கு மாகாண முலமைச்சர் நசீர் அஹமட் 17,599 வாக்குகளையும் பெற்று வெற்றியை உறுதிப்படுத்தினர். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.எச்.எம். ஹாரிஸ் 36,850 வாக்குகளையும் பைசல் காசிம் 29,423 வாக்குகளையும் பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகினர். தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா 35,697 வாக்குகளைப் பெற்று மீண்டும் பாராளுமன்ற ஆசனத்தை உறுதிப்படுத்தினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட ஊடகவியலாளர் ஆர்.எம்.எம்.முஷாரப் 18,389 வாக்குகளைப் பெற்று முதற்தடவையாக பராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். நுவரெலியாவில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அதிக விருப்பு வாக்குகளாக 1,09 155 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டி முதற்தடவையாக பராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளர் மருதுபாண்டி இராமேஷ்வரன் 57,902 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் முதற்சந்தர்ப்பம் இதுவாகும். ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் 83,892 வாக்குகளையும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் 72 ,167 வாக்குகளையும் பெற்று வெற்றியீட்டியுள்ளனர். எம்.உதயகுமார் 68 ,119 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டி முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். கண்டியில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் 83,398 வாக்குகளையும் எம்.எச்.எம்.ஹலீம் 71,063 வாக்குகளையும் எம்.வேலுகுமார் 57,445 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். பதுளை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட வடிவேல் சுரேஷ் 49, 762 வாக்குகளையும் அருணாச்சலம் அரவிந்தகுமார் 45,491 வாக்குகளையும் பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகினர். கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் எஸ்.எம். மரிக்கார் 96,916 வாக்குகளையும் முஜிபுர் ரஹ்மான் 87,589 வாக்குகளையும் பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகினர். ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் 62,091 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். கேகாலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் கபீர் ஹாசிம் 58,716 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அனுராதபுரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் இஷாக் ரஹ்மான் 49,290 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார் புத்தளத்தில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் அலி சப்ரி மொஹமட் ரஹீம் 33,509 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டி முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட மேலும் பல அமைப்புகள் ஒன்றிணைந்து போட்டியிட்டதன் மூலம் புத்தளம் மாவட்டத்தில் இம்முறை முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.