தொலைத்தொடர்பு உபகரணங்களுடன் கைதான சீனர்கள்

383 தொலைபேசிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களுடன் கட்டுநாயக்கவில் பிடிபட்ட 09 சீன பிரஜைகள்

by Staff Writer 16-04-2026 | 10:50 AM

Colombo (News 1st) ஒருதொகை தொலைத்தொடர்பு உபகரணங்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த 09 சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணினி நிதி குற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் சந்தேகநபர்கள் குறித்த பொருட்களை கொண்டுவந்துள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பொருட்களின் பெறுமதி 02 கோடியே 40 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவாகும்.

383 பயன்படுத்தப்பட்ட தொலைபேசிகள், 101 டெப் கணினிகள் மற்றும் 06 வைஃபை ரவுட்டர்கள் இதில் உள்ளடங்குகின்றன.

சந்தேகநபர்கள் தமது உடல் மற்றும் ஆடையினுன் Sellotape பயன்படுத்தி ஒட்டி, பொருட்களை கொண்டுவந்துள்ளனர்.

சீனாவின் குங்மிங் நகரில் இருந்து வந்த சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஒருகோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சிகரெட்களை நாட்டிற்கு கொண்டு வந்த சீன பிரஜைகள் 06 பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 75,900 சிகெரெட்களை சட்டவிரோதமாக கொண்டு வந்துள்ளனர்.