.webp)
-554996.jpg)
Colombo (News1st) - எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதற்காக அனைத்து அமைச்சுகளையும் உள்ளடக்கும் வகையில் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் 05 அதிகாரிகளை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை மேற்பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட குழு நேற்று (27) கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் ஏற்படும் எரிபொருள் தொடர்பான சிக்கல்களை கண்டறிந்து, கூட்டுத்தாபனத்துடன் ஒருங்கிணைப்பை பேணி தீர்வுகளை வழங்க தலையிடுவது இந்த அதிகாரிகளின் பொறுப்பாகும் என குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தங்களது உற்பத்திகளை நாடுமுழுவதும் விநியோகப்பதற்காக அவர்களது வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் கோட்டாவின் அளவு குறைவாகும் என பல்வேறு தரப்பிரனரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்படுமாயின் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பண்டிகை காலத்தில் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாக நேரிடும் எனவும் குறித்த கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள், சதொச உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் எரிபொருள் விநியோகிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதற்கமைய அந்த நிறுவனங்களிலிருந்து முன்வைக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுப்பதற்கும் குறித்த கோரிக்கைகளை உரிய அமைச்சுக்களின் ஊடாக வலுசக்தி அமைச்சிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாயம், கடற்றொழில் உள்ளிட்ட ஏனைய துறைகளுக்காக அந்தந்த துறைகளுக்குரிய அரச அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய வழங்கப்படும் கடிதத்திற்கு எரிபொருளை விநியோகிப்பதற்கு பதிலாக QR முறையை பயன்படுத்தும் வேலைத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
