.webp)
-554025.jpg)
COLOMBO(News1st) - மலையகத்தின் எதிர்கால கல்வி மற்றும் பாடசாலை காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள், அடிப்படை வசதிகள், பௌதீகவளங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (19) நடைபெற்றது.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் , மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ், கிருஷ்ணன் கலைச்செல்வி, அம்பிகா சாமுவெல், இரவீந்திர பண்டார, அனுஷ்கா உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டனர்.
பெருந்தோட்டப் பாடசாலைகள் ஒவ்வொன்றுக்கும் சுமார் 02 ஏக்கர் காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மலையகத்தில் காணப்படும் 864 பாடசாலைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை 02 வாரங்களில் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மலையக பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான திட்டங்களை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆசிரியர் அதிபர் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்குதல் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
எதிர்காலத்தில் 23 000ஆசிரியர்களை சேவையில் இணைப்பதன் மூலம் தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
