ரணிலின் இங்கிலாந்து பயணம் உத்தியோகபூர்வமற்றது - சட்ட மாஅதிபர் திணைக்களம்

by Staff Writer 28-01-2026 | 7:26 PM

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக மேற்கொண்ட இங்கிலாந்து பயணம், உத்தியோகபூர்வமற்றது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(28) அறிவித்தார்.

36 மணித்தியாலங்களுக்குள் ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிகமான மக்கள் பணத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டமை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதனை தெரிவித்தார்.

இந்த வழக்கின் 2ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய இருதினங்களில் 36 மணித்தியாலங்களுக்குள் உத்தியோகபூர்வமற்ற தனிப்பட்ட பயணத்திற்காக 166 இலட்சம் ரூபா மக்கள் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று பிற்பகல் 1.20 அளவில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்படவிருந்த நிலையில் வீட்டிலிருந்து தப்பிச்சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

மேற்கோள் ஆரம்பம்
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்

நீதவான் அவர்களே, இந்த நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய கடந்த நவம்பர் 13ஆம் திகதி சட்ட மாஅதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைக்குழுவொன்று இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தெரிந்ததும் சட்ட மாஅதிபரை சந்திப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான அனுஜ பிரேமரத்ன, ரொனால்ட் பெரேரா உள்ளிட்ட மூவர் வந்திருந்தனர். அவர்கள் வந்தது இந்த வழக்கை பற்றி பேசுவதற்கு அல்ல, தூண்டிவிட்டு வேலையை குழப்புவதற்கு.  எவ்வாறு அப்படி சென்றார்கள். ஷானி அபேசேகர தலைமையிலான பொலிஸ் குழுவினர் சட்ட மாஅதிபரின் அனுமதியுடனா இந்த விசாரணைக்காக சென்றார்கள் என்பதையே அவர்கள் மூவரும் தேடினர்.

மேற்கோள் முடிவு

இந்த சர்ச்சைக்குரிய பயணம், உத்தியோகபூர்வ பயணம் என தெரிவித்து சந்தேகநகநபரின் தரப்பு, வூல்வஹெம்ப்டன் பல்லைக்கழகத்தில் இருந்து வழங்கப்பட்டதாக கூறி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கடிதம் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

மேற்கோள் ஆரம்பம்
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்

--இது தொடர்பாக 13 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கடிதம் தூதரகம் ஊடாக வந்ததொன்றென எந்தவொரு வாக்குமூலத்திலும் கூறப்படவில்லை. கௌரவ நீதவான் அவர்களே, இது உத்தியோகபூர்வ பயணம் அல்ல. முதலாவது சந்தேகநபர் கோர்டன் பிரவுனை  சந்திக்கச் சென்றதாகவும் அந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டதால் மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்றதாகவும் கூறினர். கோர்டன் பிரவுன் என்பவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டின் பிரதமராக இருந்த ஒருவராவார்.

மேற்கோள் முடிவு

வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான சமன் ஏக்கநாயக்க தொடர்பிலும் நீதிமன்றத்தில் தௌிவுபடுத்தப்பட்டது.

மேற்கோள் ஆரம்பம்
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்

கௌரவ நீதவான் அவர்களே, இந்த வழக்கின் 2ஆவது சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க எனப்படும்  சொமிசார பண்டார ஏக்கநாயக்க என்பவரை கைது செய்ய சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார். அதன்படி கடந்த 22ஆம் திகதி அவரை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். அவர் 22ஆம் திகதியில் இருந்து காணாமல் போனார். அவர் ஒரு பழகிப்போன குற்றவாளியைப் போன்றே நடந்துகொண்டார். ஃபோனை ஓஃப் செய்து மனைவியுடன் சென்றுள்ளார். செல்லும்போது அயல் வீட்டாரிடம் மீன், அரிசி மற்றும் நெத்தலியை அவித்து வழங்கி சென்றுள்ளார். வீட்டிலுள்ள பூனைக்கு உணவிடுமாறு கூறியுள்ளனர்.

மேற்கோள் முடிவு

சந்தேகநபரான சமன் ஏக்கநாயக்க உத்தியோகபூர்வமற்ற ஒரு பயணத்திற்கு உத்தியோகபூர்வ அந்தஸ்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் குறிப்பிட்டார்.

மேற்கோள் ஆரம்பம் 
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்

நீதவான் அவர்களே, இந்த பயணம் தொடர்பான ஆரம்ப ஆவணங்களில் Private tour என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அது Tour என மாற்றப்பட்டுள்ளது. இறுதியாக Official tour என மாற்றப்பட்டுள்ளது. இந்த பயணம் உத்தியோகபூர்வமானது அல்ல, தனிப்பட்ட ரீதியிலானது என தெரிந்தே இந்த 2ஆவது சந்தேகநபர் நிதியை அனுமதித்துள்ளார்.

மேற்கோள் முடிவு

மேற்கோள் ஆரம்பம்
கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார

கடந்த வழக்கு தவணையில் வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய முறைப்பாட்டாளர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். எனினும் வுல்வஹெம்டன் பல்கலைக்கழகத்திலிருந்து இன்னும் வாக்குமூலம் பெறப்படவில்லை. ஆகவே மின்னஞ்சல் ஊடாக அந்த வாக்குமூலங்களைப் பெற நடவடிக்கை எடுங்கள். வழக்கின் விசாரணை முன்னேற்றம் குறித்து ஆராய வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அழைக்கப்படும். அன்றைய தினத்திற்குள் விசாரணைகளை நிறைவு செய்யுமாறு முறைப்பாட்டாளருக்கு உத்தரவிடப்படுகிறது. இரண்டாவது சந்தேகநபர் தொடர்பான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் திகதி பிற்பகல் 02 மணிக்கு அழைக்கப்படும்.

மேற்கோள் முடிவு