COLOMBO( News 1st)
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கையின் முப்படைகளும் 372 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளன.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் அனைத்து தரநிலை உத்தியோகத்தர்களும் தங்களின் ஒருநாள் சம்பளத்தை இதற்கு நன்கொடையாக
கொடுத்துள்ளனர்.
இதற்காக இலங்கை இராணுவத்திலிருந்து 250 மில்லியன் ரூபாவும் இலங்கை கடற்படையிடமிருந்து 73 மில்லியனைவிட அதிக தொகையும் இலங்கை விமானப்படையிடமிருந்து 49 மில்லியன் ரூபாவும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான காசோலைகள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கல்வி அமைச்சின் பணிக்குழாம் அதிகாரிகளின் 2 நாட்கள் சம்பளமும் ஏனைய ஊழியர்களின் ஒரு நாள் சம்பளமும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்காக அரசாங்கத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.