MTV தயாரிப்பாளர் சதாசிவம் ஞானேந்திரன் காலமானார்..

by Staff Writer 27-10-2025 | 12:58 PM

Colombo (News 1st) MTV வணிகத் தயாரிப்பு பிரிவில் சேவையாற்றிய கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் தமிழ் விவாத அணித் தலைவரான சதாசிவம் ஞானேந்திரன் காலமானார்.

அமரர் சதாசிவம் ஞானேந்திரன் 2003ஆம் ஆண்டு கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் MTV நிறுவனத்தில் வணிகத் தயாரிப்பு பிரிவில் தயாரிப்பாளராக தனது சேவையை ஆரம்பித்தார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த அவர், பதுளையில் வசித்ததுடன் உயர்கல்வியை தொடர்வதற்காக கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் இணைந்தார்.

பாடசாலை காலத்தில் அதீத திறமை கொண்ட நகைச்சுவை உணர்வுமிகு பேச்சாளராகவும் சிறந்த விவாதியாகவும் அனைவராலும் அன்னார் அறியப்பட்டார்.

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் தமிழ் விவாத அணியின் பல வெற்றிகளில் அமரர் சதாசிவம் ஞானேந்திரன் பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.

MTV வணிகத் தயாரிப்பு பிரிவில் தயாரிப்பாளராக கடமையாற்றிய அவர் சக்தி TV தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.

மறைந்த ஞானேந்திரனின் சிங்கள மொழி புலமை சிரச TV நிகழ்ச்சிகளையும் மிளிரச் செய்தது.

விளம்பரத் தொகுப்பு, எழுத்தாழுமை, ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் திறமையை வௌிப்படுத்திய அமரர் சதாசிவம் ஞானேந்திரன், அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட நண்பராகத் திகழ்ந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பொரளையில் இன்று(27) இடம்பெறவுள்ளன.