.webp)
Colombo (News 1st) விவேகமான நாணயக்கொள்கை, நிதியியல் முறைமை மேற்பார்வை மற்றும் சவால்மிக்க உலகளாவிய நிலைமைகளில் வழிகாட்டுவதில் மத்திய வங்கியின் தலைமைத்துவத்தை கௌரவிக்கும் நோக்கிலான 2025 உலகளாவிய சிறந்த வங்கி விருதுகள் நிகழ்வில் Global Finance சஞ்சிகை மூலம் 'A' தர விருது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கு வழங்கப்பட்டது.
கடந்த 13 முதல் 18ஆம் திகதி வரை வொஷிங்டன் நகரில் இடம்பெற்ற உலக வங்கி குழுமம், சர்வதேச நாணய நிதியத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த கூட்டத்திற்கு இணையாக இந்த விருது வழங்கல் விழா நடைபெற்றது.
வருடாந்த கூட்டத்திற்கு இணையாக இலங்கை பிரதிநிதிகள் குழு உயர்மட்ட இருதரப்பு மற்றும் பல்தரப்பு கலந்துரையாடல்கள் பலவற்றிலும் பங்குபற்றியது.
உலகளாவிய நாட்டிற்கான படுகடன் வட்டமேசை சந்திப்பு இதில் விசேடமானதாகும்.
இலங்கை கடன் பாதிக்கப்படும் தன்மைகளைக் குறைத்தல் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளை இதன்போது வரவேற்றதுடன், கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தின் இதுவரையான மைல்கற்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது நிதிக் கட்டமைப்பை பாதுகாப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், வலுவான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு மற்றும் நிர்வாகத்தின் தொடர்ச்சியான மேம்பாட்டுக்கான விரிவான ஆதரவும் கிடைக்கப்பெற்றதாக மத்திய வங்கி இன்று(20) வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பின் போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றமும் இதன்போது உயர்ந்த பாராட்டை பெற்றதுடன் இதன்பொருட்டு தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.