.webp)
Colombo (News 1st) போலி மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பிரதிவாதிகளுக்கு எதிராக விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை இன்று(16) கையளிக்கப்பட்டது.
நீண்ட விளக்கத்தின் பின்னர் பிரதிவாதிகள் 12 பேரையும் தலா 05 இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளின் கீழ் விடுவிப்பதற்கு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஹியூமன் இம்யூனோ குளோபுலின் மற்றும் ட்ரிபொப்சிமெப் என அடையாளப்படுத்தி மருந்து அல்லாத வேறு திரவங்கள் அடங்கிய 6,195 குப்பிகளை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவிற்கு வழங்கிய இலங்கை அரசாங்கத்தின் 1,444 இலட்சம் ரூபாவை மோசடியான முறையில் கையாள்வதற்கு சதித்திட்டம் தீட்டியமை, குறித்த நிதியை தவறான முறையில் பயன்படுத்தியமை தொடர்பில் 13 குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான மஹேன் வீரமன், அமாலி ரணவீர மற்றும் பிரதீப் அபேரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
பிரச்சினைக்கு வித்திட்டுள்ள மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் சுதத் ஜனக்க பெர்னாண்டோ, மருத்துவ விநியோகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் டொக்டர் கபில விக்கிரமநாயக்க, மருத்துவ விநியோகப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஷாந்தினி சொலமன், மருத்துவ விநியோகப் பிரிவின் கணக்காய்வாளர் நெரான் தனஞ்சய, மருத்துவ விநியோகப் பிரிவின் மொத்த கையிருப்பு கட்டுப்பாட்டாளர் சுஜீத் குமார, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஸ்ரீ சந்திரகுப்த, மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேரத் முதியான்சேலாகே தர்மசிறி ரத்ன குமார ஹேரத், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரச பெறுகை செயன்முறையின் பெறுகை குழு உறுப்பினர் டொக்டர் ஜயநாத் புத்பிட்டிய, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க, மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளரான டொக்டர் அரம்பேகெதர துசித்த சுதர்ஷன மற்றும் ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் தலைவர் விஜித்குணசேகர ஆகியோர் குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இந்த வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களை சிறிய லொறியில் இன்று(16) கொண்டுவந்திருந்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வழக்கின் முதலாவது பிரதிவாதியான சுதத் ஜானக்க பெர்னாண்டோ என்பவரை சிறைச்சாலைகள் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
வழக்கின் 9ஆவது பிரதிவாதியான மருத்துவ விநியோகப் பிரிவில் கடமையாற்றிய ஜயனாத் புத்பிட்டிய என்ற வைத்தியர் திறந்த நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை என்பதுடன் குறித்த பிரதிவாதி வௌிநாடு சென்றுள்ளதாக அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.
ஏனைய 11 சந்தேகநபர்களுக்கும் திறந்த நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி ஹிரிஹாகம, பிரதிவாதிகளுக்கு பிணை வழங்க சட்ட மாஅதிபர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.
மேற்கோள் ஆரம்பம்
"வழக்கின் தன்மை மற்றும் வழக்கு தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள குழப்பத்தால் இந்த சந்தர்ப்பத்தில் பிரதிவாதிகளுக்கு பிணை வழங்க எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். நீதிபதி அவர்களே, பிரதிவாதிகளுக்கு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தாலும் பிணை சட்டத்தின் பிரகாரம் இந்த சந்தர்ப்பத்தில் பிரதிவாதிகளுக்கு பிணை வழங்குவதற்கு குறிப்பிடத்தக்க முக்கிய காரணங்கள் உள்ளதா என்பதை ஆராய வேண்டியுள்ளது"
மேற்கோள் நிறைவு
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான அனூஜ பிரேமரத்ன, நலின் லத்தூவஹெட்டி, பிரியந்த நாவான மற்றும் சரத் ஜயமான்ன ஆகியோர் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு பிரதிவாதிகளுக்காக தனித் தனியாக பிணை விண்ணப்பத்தை முன்வைத்தனர்.
நீதவான் நீதிமன்றத்தில் குறிப்பிடத்தக்க விசேட காரணங்கள் கவனத்தில்கொள்ளப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ளதால் பிரதிவாதிகளை இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கவேண்டிய தேவையில்லை எனவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
சட்ட மாஅதிபர் நாட்டு மக்களையும் பாதிக்கப்பட்ட தரப்பினரையும் பிரதிநிதித்துவம் செய்வதால் நியாயமான வழக்கு விசாரணையை நடத்த வேண்டியது அத்தியாவசியமாகும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி ஹிரிஹாகம இதன்போது குறிப்பிட்டார்.
நீதவான் நீதிமன்றத்தில் பிணை அனுமதி பெறுவதற்காக பிரதிவாதிகள் முன்வைத்த விடயங்கள் தற்போது செல்லுபடியாகாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.