.webp)
-582359-539892.jpg)
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவிடம் காலியில் டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு இலங்கை அணி கொழும்பில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் தொடரில் பதிலடி கொடுத்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகல் ஆட்டமாக நடைபெற்ற 2ஆவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டியை இலங்கை அணி 174 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் அதிக ஓட்ட வித்தியாசத்தில் இலங்கை அணி அடைந்த வெற்றி இதுவென்பதும் சிறப்பம்சமாகும்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக அவிஷ்க பெர்னாண்டோவுக்கு பதிலாக இன்றையப் போட்டியில் விளையாடிய நிஷான் மதுஷ்க 51 ஓட்டங்களை பெற்றார்.
அணித்தலைவர் சரித் அசலங்க மற்றும் குசல் மென்டிஸ் ஜோடி 4ஆம் விக்கெட்டுக்காக 94 ஓட்டங்களை அதிரடியாக பகிர்ந்தது.
குசல் மென்டிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 5ஆவது சதத்தை பூர்த்தி செய்து 101 ஓட்டங்களைக் குவித்தார்.

ஆர்.பிரேமதாச மைதானத்தில் 1000 ஓட்டங்களை கடந்த இலங்கையின் 8ஆவது வீரர் என்ற சிறப்பையும் குசல் மென்டிஸ் அடைந்தார்.
அணித்தலைவர் சரித் அசலங்க சர்வதேச ஒருநாள் அரங்கில் 15ஆவது அரைச்சத்தை கடந்து 78 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்களைப் பெற்றது.
282 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலியாவின் முதல் 3 விக்கெட்டுக்களையும் அசித பெர்னாண்டோ வீழ்த்தினார்.
இலங்கை அணியின் சிறந்த பந்து வீச்சை எதிர்க்கொள்ள முடியாத அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இது இலங்கை மண்ணில் அவுஸ்திரேலியாவின் குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.

சிறந்த முறையில் பந்துவீசிய, சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
சர்வதேச ஒருநாள் தொடரை 2 - 0 என இலங்கை அணி கைப்பற்றியது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக குசல் மென்டிஸ் தெரிவாக தொடரின் சிறந்த வீரர் விருதை சரித் அசலங்க தன்வசப்படுத்தினார்.
