ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(15)

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(15)

by Staff Writer 15-08-2024 | 7:34 AM

Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று(15) காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இதற்கான ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு காலை 9 மணி முதல் முற்பகல் 11.30 வரை சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் நேற்று(14) நண்பகலுடன் நிறைவடைந்திருந்தது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று(14) விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டது.

வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவற்றை தௌிவுபடுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.