மழையுடனான வானிலை தொடரும்...

மழையுடனான வானிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்

by Staff Writer 20-05-2024 | 2:46 PM

Colombo (News 1st) இன்று(20) காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் குளியாப்பிட்டிய பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதற்கிணங்க குளியாப்பிட்டியில் 141.6 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

குறித்த காலப்பகுதியில் தும்மலசூரிய பகுதியில் 136.7 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் மொரலிய ஓய பகுதியில் 127.4 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

தென்மேல் பருவப்பெயர்ச்சி ஆரம்பித்துள்ளதால் நாட்டில் காற்றுடன் கூடிய மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மில்லிமீட்ட வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தலைநகரிலும் நேற்று(19) முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.

கம்பஹா மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகின்றது.

நீர்கொழும்பு நகரிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதுடன், உள்வீதிகள் சிலவற்றில் நீர் தேங்கியுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் .

யாழ்.மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.

மட்டக்களப்பு - சித்தாண்டி சந்தனமடு ஆறு பெருக்கெடுத்தமையால் தரைவழி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

சித்தாண்டியிலிருந்து ஈரளக்குளம் செல்லும் 12 கிராமங்களில் உள்ள 345 மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஈரளக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பாதுகாப்பற்ற தோணியில் பெரும் சிரமத்தின் மத்தியில் போக்குவரத்து செய்து வருகின்றனர்.

அனுராதபுரத்தின் பல பகுதிகளிலும் பெய்து வரும் மழையினால் அப்பகுதியிலுள்ள குளங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.

மழை காரணமாக வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் 19127 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட 1140 பேர் 4 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மலையத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் கூறினர்.

சில பகுதிகளில் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்தும், ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதாக செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், மவுசாகலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

அத்தனகலு ஓயாவின் தூனமலை பகுதியில் சிறிதளவில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

களு கங்கையிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

பலத்த மழையினால் உடவளவ, அங்கமுவ, இராஜாங்கனை மற்றும் பொல்கொல்ல நீர்த்தேக்கங்கள் வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நிலவும் மழையுடனான வானிலையால் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிருலப்பனை பூர்வாராம வீதியில் முச்சக்கர வண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

நிலவும் பலத்த மழையுடன், பேருவளை முதல் காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வரையான பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களுக்கு அப்பாலுள்ள கடற்பிரசேதத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கற்பிட்டியிலிருந்து கொழும்பு ஊடாக பேருவளை வரையான கடற்பிரதேசங்களுக்கு அப்பாலுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் சீற்றம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களுக்கு அப்பாலுள்ள கடற்பிரசேதங்களில் கடலலை 2.5 மீட்டர் முதல் 03 மீட்டர் வரை உயரக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதிகளில் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என மீனவர்களுக்கும் கடல்சார் ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.