Colombo (News1st) பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கணக்கீடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் நயோமி ஜயவர்தன தெரிவித்தார்.
இன்று(01) புதிய பஸ் கட்டணங்களை அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் 10 ரூபாவினாலும், இம்மாதம் 24 ரூபாவினாலும் டீசல் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியஞ்ஜித் சுட்டிக்காட்டினார்.
இந்த விலைக்குறைப்பின் பலன்களை பயணிகளுக்கு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கமைய 04 வீதம் அளவில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெட்ரோலின் விலை 300 ரூபாவை விட குறைக்கப்படுமாக இருந்தால் மாத்திரம் முச்சக்கர வண்டி பயணக் கட்டணங்கள் குறைக்கப்படுமென அதன் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டாலும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகளின் கட்டணங்களைக் குறைப்பதற்கான இயலுமை இல்லை என அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா கூறியுள்ளார்.