Colombo (News 1st) நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 க்கு 0 எனும் கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 5 விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களை பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்தியது.
இலங்கை சார்பில் முதல் இன்னிங்ஸில் டினேஷ் சந்திமால், கமிந்து மென்டிஸ் மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் சதம் கடந்தனர்.
நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பிரபாத் ஜயசூரிய 6 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அதற்கமைய, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்காக நியூஸிலாந்து மீண்டும் களமிறங்கிய போதிலும் அனைத்து விக்கெட்களையும் இழந்து 360 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
நிஷான் பீரிஸ் 6 விக்கெட்களை கைப்பற்றினார்.
நிஷான் பீரிஸ் கன்னி டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்களை கைப்பற்றிய இலங்கையின் ஏழாவது வீரர் எனும் சிறப்பை பெற்றார்.
இந்த வெற்றியின் ஊடாக 02 போட்டிகள் கொண்ட தொடரை 2 க்கு 0 என இலங்கை அணி கைப்பற்றியது.
அத்துடன் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி 15 வருடங்களின் பின்னர் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.