Colombo (News1st) கிரிக்கெட்டின் பிதாமகர் என போற்றப்படும் சேர். டொன் பிரட்மனின் சாதனையை சமப்படுத்திய பெருமையை இலங்கையின் கமிந்து மென்டிஸ் இன்று(27) பெற்றார்.
13 இன்னிங்ஸ்களில் 5 சதங்களை கடந்த சாதனையே அது.
சேர். டொன் பிரட்மன் அந்த சாதனையை 1930 ஆம் ஆண்டில் நிகழ்த்தியுள்ளதுடன் அதனை தற்போது கமிந்து மென்டிஸ் எட்டிப்பிடித்துள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமடித்ததன் மூலம் அவர் சாதனையை சமப்படுத்தியுள்ளார்.
காலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் 3 விக்கெட் இழப்பிற்கு 306 ஓட்டங்களுடன் இலங்கை அணி முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.
ஏஞ்சலோ மெத்யூஸ் 78 ஓட்டங்களுடனும் கமிந்து மென்டிஸ் 51 ஓட்டங்களுடனும் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
மேலும் 22 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில் ஏஞ்சலோ மெத்யூஸ் 88 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களுடன் வௌியேறினார்.
எனினும், 6ஆவது விக்கெட்டுக்காக இணைந்த கமிந்து மென்டிஸ் மற்றும் குசல் மென்டிஸ் ஜோடி வீழ்த்தப்படாத இணைப்பாட்டமாக 200 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியை உச்சகட்ட நிலைக்கு கொண்டு சென்றது.
இவர்கள் இருவரும் அடுத்தடுத்து சதமடித்ததுடன் குசல் மென்டிஸ் 106 ஓட்டங்களையும் கமிந்து மென்டிஸ் 182 ஓட்டங்களையும் பெற்றனர்.
கமிந்து மென்டிஸ் குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்களை அடைந்த ஆசியாவின் முதல் வீரராகப் பதிவாகியுள்ளார்.
இதற்கு முன்பு பாகிஸ்தானின் பவாட் ஆலம் 22 இன்னிங்ஸ்களில் 5 சதங்களை எட்டி அந்த சாதனையை தன்வசம் வைத்திருந்ததுடன் தற்போது அதனை கமிந்து மென்டிஸ் தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 602 ஓட்டங்களைப் பெற்று முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.
கிலென் பிலிப்ஸ்(Glenn Phillips) 3 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தி(Tim Southee) ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பதிலளித்தாடும் நியூஸிலாந்து அணிக்கு ஆரம்பமே அச்சுறுத்தலாய் இருந்தது.
டொம் லதம்(Tom Latham) 2 ஓட்டங்களுடனும் டெவோன் கொன்வே(Devon Conway) 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
கேன் வில்லியம்ஸன் 6 ஓட்டங்களுடனும் அஜாஷ் பட்டேல் ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதுள்ளனர்.