Colombo (News 1st) இந்தியாவிற்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்காக சரித் அசலங்க தலைமையிலான இலங்கை குழாம் இன்று(23) அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச குழாத்தில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். நிறைவடைந்த சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற குசல் மென்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க, வனிந்து ஹசரங்க, கமிந்து மென்டிஸ், தசுன் சானக்க, மதீஷ பத்திரன, நுவன் துஷார, துஷ்மந்த சமீர, துலித் வெல்லாளகே ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்காத குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால், பினுர பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரரான சமிந்து விக்ரமசிங்கவிற்கும் இந்த குழாத்தில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.