வேதனை அளிக்கும் இலங்கை கிரிக்கெட்

வேதனை அளிக்கும் இலங்கை கிரிக்கெட் - முதல் சுற்றுடன் வௌியேற்றம்

by Rajalingam Thrisanno 14-06-2024 | 11:33 AM

இலங்கை கிரிக்கெட் இரசிகர்களைப் பொறுத்தவரை இந்தமுறை உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் வேதனையளிப்பதாகவே அமைந்துள்ளது.

எப்போதுமில்லாதவாறு இந்த உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் முதல் சுற்றுடன் வௌியேற்றப்படுவதே அதற்குக் காரணம்.

இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணி முதல் சுற்றுடன் வௌியேற்றப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 

2014 ஆம் ஆண்டு இருபதுக்கு20 உலக சாம்பியனான இலங்கை அணி 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று இரண்டாமிடத்தை பெற்ற பலமிக்க வரலாற்றையே இதுவரை தொடர்ந்துவந்தது. 

ஆனாலும், இந்த வருடம் அந்த வெற்றிகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போன்று இலங்கை இந்தமுறை முதல் சுற்றுடன் வௌியேற்றப்பட்டுள்ளது. 

நெதர்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றதால் சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும் இலங்கை அணியின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. 

கிங்ஸ்டவுன் ஆர்னோஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சார்பாக ஷகிப் அல் ஹசன் 64 ஓட்டங்களையும் தன்சிட் ஹசன் 35 ஓட்டங்களையும் மஹ்மதுல்லா 25 ஓட்டங்களையும் பெற்றனர். 

பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 05 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களைப் பெற்றது.

வெற்றி இலக்கான 160 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய நெதர்லாந்து அணியால் 20 ஓவர்களில் 08 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது. 

சிப்ரான் எங்ரோபெர்ச்ட்(Sybrand Engelbrecht) 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றார். 

பந்துவீச்சில்  ரிசாட் ஹூசைன் 03 விக்கட்டுக்களையும் தஸ்கின் அஹமட் 02 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

பங்களாதேஷ் அணி 25 ஓட்டங்களால் வெற்றிபெற்று லீக் சுற்றில் தனது இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது. 

இந்தப் போட்டியின் முடிவுடன் இலங்கை அணியின் சுப்பர் 08 சுற்றுக்கான கனவு கைநழுவிச் சென்றது.

இந்த வெற்றிக்கு அமைவாக டி குழுவில் பங்களாதேஷ் அணி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. 

தென்னாபிரிக்கா 6 புள்ளிகளுடன் முதலிடத்தை வகிக்கிறது. 

நெதர்லாந்து 2 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் நேபாளம் மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு புள்ளியுடன் நான்காம் ஐந்தாமிடங்களிலும் உள்ளன. 

இலங்கைக்கு லீக் சுற்றில் இன்னும் ஒரு போட்டி மாத்திரமே எஞ்சியுள்ளதுடன் அந்தப் போட்டி நெதர்லாந்துக்கு எதிராக எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

அந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றாலும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முடியாது என்பதுடன் தென்னாபிரிக்கா சுப்பர் 8 சுற்றை உறுதிசெய்துகொண்டுள்ளதுடன் பங்களாதேஷூம் சுப்பர் 8 வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொண்டுள்ளது.