20/20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா

20/20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா வெற்றி

by Staff Writer 10-06-2024 | 4:10 PM

Colombo (News 1st) இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தானுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி ​பெற்றது.

A குழுவிற்கான போட்டியில் இவ்விரு அணிகளும் நேற்று(09) நியூயோர்க்கின் நாஸோ கவுண்டி மைதானத்தில் பவலப்பரீட்சை நடத்தின.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்ததுடன், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஆரம்பம் முதல் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

அணித்தலைவர் ரோஹித் ஷர்மாவும் விராட் கோஹ்லியும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.

முதலாவது ஓவர் நிறைவில் மழை குறுக்கிட்டதால் போட்டி சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டதுடன் பின்னர் மீண்டும் ஆரம்பமானது.

ரோஹித் ஷர்மா 13 ஓட்டங்களுடனும் விராட் கோஹ்லி 4 ஓட்டங்களுடனும் அக்ஸர் பட்டேல் 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க ரிஷப் பண்ட் 42 ஓட்டங்களை அணிக்காக அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

ரவீந்த்ர ஜடேஜாவும் பும்ராவும் ஓட்டமின்றி ஆட்டமிழக்க ஏனைய வீரர்கள் 10-இற்கும் குறைவான ஓட்டங்களை பெற்றனர்.

19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இந்திய அணி 119 ஓட்டங்களை பெற்றது.

பந்துவீச்சில் நஷீம் ஷா மற்றும் ஹரிஸ் ரவூப் தலா 3 விக்கெட்களையும் மொஹமட் அமீர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

120 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான், ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் இந்திய அணியின் பந்துவீச்சால் பின்னர் ஓட்டங்களை பெறுவதில் சிக்கலை எதிர்கொண்டது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மொஹமட் ரிஷ்வான், 31 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றதுடன் அணித்தலைவர் பாபர் அசாம் உள்ளிட்ட 3 வீரர்கள் தலா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் அணி 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவின் சிறப்பான பந்துவீச்சில் இந்திய அணியின் வெற்றி இறுதி ஓவரில் தக்கவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

4 ஓவர்களில் 14 ஓட்டங்களை மாத்திரமே வழங்கி 3 விக்கெட்களை அவர் கைப்பற்றியிருந்ததுடன் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

நேற்றைய வெற்றியை தொடர்ந்து இந்திய அணி A குழுவிற்கான புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை, TV 1 மற்றும் www.sirasatv.lk எனும் இணையத்தளத்திலும் நேரலையாகக் கண்டுகளிக்க முடியும்.

ஏனைய செய்திகள்