.webp)

Colombo (News 1st) சர்வதேச உணவு பாதுகாப்பு தினம் இன்றாகும்.
உணவு பாதுகாப்பு மனித சுகாதார பாதுகாப்புடன் நெருங்கியதாக காணப்படுகின்றது.
இதனை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை, 2018 ஆம் ஆண்டு முன்வைத்த யோசனைக்கு அமைவாக உலக உணவு பாதுகாப்பு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
போசனை மட்டத்திலான உணவை உட்கொள்ள வேண்டிய தேவையை மக்களுக்கு தௌிவூட்டும் வகையில், அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இன்றைய தினம் முக்கியதுவம் பெறுகின்றது.
உணவு பாதுகாப்பு இன்மையினால் சர்வதேச ரீதியில் ஆண்டுதோறும் 600 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், அதில் 20 இலட்சம் மக்கள் உயிரிழப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 40 வீதமானோர் ஐந்து வயதிற்கும் குறைவானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக உணவு பாதுகாப்பின்மை வீதம் பெருந்தோட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளதாக உலக உணவுத் திட்டம் அண்மையில் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உலக உணவுத் திட்டம் தனது 2023 ஆண்டுக்கான வீட்டு உணவுப் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை மாதிரிக் குடும்பங்களின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 24% குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதம் மார்ச் மாதத்தில் 17% ஆக காணப்பட்டதுடன், ஆகஸ்ட் - செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 24% வரை அதிகரித்துள்ளது.
ஆண் தலைமைத்துவ குடும்பங்களில் 23 வீதமாகவும் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் 32 வீதமாகவும் உணவுப் பாதுகாப்பின்மை காணப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
26% குடும்பங்களில் போதுமானளவு உணவு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை எனவும் உலக உணவுத் திட்டம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குடும்பமொன்று அதன் மொத்த செலவில் 62% இற்கும் மேல் உணவுக்காக செலவிடுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
