1200 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு இணக்கம் தெரிவித்துள்ளோம்: பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் அறிவிப்பு

by Bella Dalima 10-05-2024 | 7:36 PM

Colombo (News 1st) ஜனாதிபதியும் தொழில் அமைச்சரும் விடுத்த கோரிக்கைக்கு அமைய, 1200 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக பெருந்தோட்ட நிறுவனங்களின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் விடுத்த கோரிக்கைக்கு அமைய, 1200 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக பெருந்தோட்ட நிறுவனங்களின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் இராஜதுரை நியூஸ்ஃபெஸ்டுக்கு தெரிவித்தார்.

1200 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் ஊழியர் சேமலாப நிதியம் , ஊழியர் நம்பிக்கை நிதியம் அடங்கலாக 1380 ரூபா தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளப் பொதியாகக் கிடைக்கும் என அவர் கூறினார்.

மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோ கொழுந்திற்கு 60 ரூபாவை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை எழுத்து மூலம் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் கையளித்ததாகவும் அவர் கூறினார்.

ஏற்கனவே, ஒரு கிலோ கொழுந்திற்கு 40 ரூபா வழங்கப்பட்டதாகவும் தற்போது மேலதிகமாக 20 ரூபாவை அதிகரித்து வழங்குவது 50% அதிகரிப்பு எனவும் ரொஷான் ராஜதுரை சுட்டிக்காட்டினார்.