விசா பிரச்சினையின் பின்புலத்தில் ஊழல் மிகு கொடுக்கல் வாங்கலா?

by Bella Dalima 07-05-2024 | 8:09 PM

Colombo (News 1st) விமான நிலையத்தில் On Arrival விசா வழங்கும் நடவடிக்கை வௌிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளமைக்கு  கடந்த மே மாதம் முதலாம் திகதி இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது எதிர்ப்பை வௌிப்படுத்தினார். 

இது தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உள்ளிட்ட மேலும் பல தரப்பினர் ஊடக சந்திப்புகளை நடத்தி நேற்று (06) விரிவாக தௌிவுபடுத்தினர்.
 
இரண்டு சந்தர்ப்பங்களில் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அமைச்சரவை பத்திரங்களுக்கு பெறப்பட்ட அனுமதியின் அடிப்படையில் விசா விநியோக நடவடிக்கையின் ஒரு பகுதி வௌிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டிரான் அலஸ் நேற்று தௌிவுபடுத்திய விடயங்களுக்கு அமைய VFS Global என்ற வௌிநாட்டு நிறுவனத்திடமே இந்த விடயம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும், தாம் இந்த செயற்பாட்டின் தொழில்நுட்ப பங்காளி மாத்திரமே என VFS Global நிறுவனம் நேற்று விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

GBS Technology Services And IVS Global என்ற நிறுவனம் இந்த கொடுக்கல் வாங்கலின் பிரதான  ஒப்பந்தக்காரர் என VFS Global நிறுவனத்தின் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

இந்த கொடுக்கல் வாங்கலுக்காக சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் அமைச்சரவை பத்திரங்களை அரச நிதி தொடர்பிலான தெரிவுக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தனது X பக்கத்தில் வௌியிட்டுள்ளார்.

குறித்த அமைச்சரவைப் பத்திரங்களில் உள்ள தகவல்களுக்கு அமைய, GBS Technology Services And IVS Global நிறுவனம் தொழில்நுட்ப பங்காளர் என அந்த ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இரண்டு முறை பிரவேசிப்பதற்காக ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் விசா அனுமதிப் பத்திரம் ஒன்றை வழங்குவதற்காக 75 டொலர் விசா கட்டணத்திற்கு மேலதிகமாக 18.5 டொலர் ​சேவைகள் கட்டணமும் 7.27 டொலர் வசதிக் கட்டணமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விபரங்களை வௌியிட்ட பல்வேறு தரப்பினரும் ​நேற்று சுட்டிக்காட்டினர்.

இதற்கமைய, சுற்றுலாப் பயணி ஒருவர் விசாவை பெற்றுக்கொள்வதற்காக 100.77 டொலரை செலுத்த வேண்டியுள்ளது.

இதேவேளை, 30 நாட்களுக்குள் ஒரு தடவை மாத்திரம் பிரவேசிப்பதற்காக 50 டொலரை பெற்று விசாவை விநியோகிக்கும் நடைமுறையும் இடை நிறுத்தப்பட்டிருந்தது.

18.5 டொலர் சேவைகள் கட்டணமும் 7.27 டொலர் வசதிக் கட்டணமும் அரசாங்கத்திற்கு கிடைக்காமல் வேறு ஒரு தரப்பினரை சென்றடைவதாக மற்றுமொரு பாரதூரமான விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

தமது சேவைகளை வழங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த கட்டணத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக  VFS Global நிறுவனம் இந்த கட்டணம் தொடர்பில் தௌிவுபடுத்தி நேற்று வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும்,  7.27 டொலர் தொடர்பில் உரிய தௌிவுபடுத்தலை எந்தவொரு தரப்பும் இதுவரை முன்வைக்கவில்லை.

இது தொடர்பிலான கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது புதிய விசா நடைமுறைக்கு அதிருப்தி வௌியிட்டு இராஜினாமா செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்ததாக Daily Mirror பத்திரிகை இன்று செய்தி வௌியிட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியை ஹரின் பெர்னாண்டோ இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற கடிதமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்ததுடன், பின்னர் அந்த கடிதம் போலியானது என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், விசா கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளாது ஏற்கனவே நடைமுறையில் இருந்த கட்டணங்களை பேணுவதற்கு அமைச்சரவை தீர்மானித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்றிரவு அறிவித்தது.

வௌிநாட்டவர்கள் நாட்டிற்கு வருகை தரும்போது ஒருவருக்கு 30 நாட்களுக்கான விசாவை வழங்குவதற்காக அறவிடப்பட்ட 50 டொலர் பழைய கட்டணத்தை அவ்வாறே பேணுவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்தது.

இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேஷியா, தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை இலவசமாக வழங்கப்பட்ட விசா சேவைகளை அவ்வாறே தொடர்வதற்கும் அமைச்சரவை தீர்மானித்தது.

எனினும், விசா சேவைகளை வழங்கும் வௌிநாட்டு நிறுவனம் அறவிடுகின்ற 18.5 டொலர் சேவைக் கட்டணம் மற்றும் 7.27 டொலர் வசதிக் கட்டணம் தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் தொடர்பிலான அறிவிப்பில் உறுதியான தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை.

இதேவேளை, சுற்றுலாத்துறை அமைச்சர் இது தொடர்பில் X தளத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

''ஆரம்பம் முதல் குறிப்பிட்டதன் பிரகாரம், 50 நாடுகளுக்கு இலவச விசா பிரவேசத்தை வழங்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வரை மே மாதம் 7 ஆம் திகதி முதல் 30 நாட்களுக்குள் ஒரு தடவை மாத்திரம் பிரவேசிப்பதற்கான விசா கட்டணமாக ஏனைய அனைத்து கட்டணங்களையும் உள்ளடக்காது 50 டொலர் வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஏற்கனவே இருந்தவாறு ஏழு நாடுகளுக்கான இலவச விசா சேவை நடைமுறையில் உள்ளது''

 சுற்றுலா அமைச்சர் கூறும் வகையில், 50 டொலர் கட்டணத்திற்கு 18.5 டொலர் சேவை கட்டணம் அல்லது  7.27 வசதிக் கட்டணம் உள்ளடக்கப்படவில்லை.

அமைச்சரவை நேற்று மேற்கொண்ட இந்த தீர்மானத்திற்கு சுற்றுலா அமைச்சரின் எதிர்ப்பு காரணமாக அமைந்ததா?

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நேற்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துகளுக்கு அமைய, இந்த தீர்மானம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த ஒன்றாகும்.

அரசியல் அரங்கில் இவ்வாறான நிலை உருவாகியுள்ள போது, குறித்து வௌிநாட்டு நிறுவனம் தொடர்ந்தும் விசா விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கடந்த மே மாதம் முதலாம் திகதி பதிவான இளைஞரின் எதிர்ப்பை அடுத்து விமான நிலையத்தின் On Arrival விசா விநியோகிக்கும் நடவடிக்கை மாத்திரம் தற்போது குடிவரவு குடியல்வு திணைக்களத்தின் கீழ் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

அப்படியாயின், அரசியல் பிரச்சினையொன்றா தற்போது உருவாக்கப்படுகிறது? 

இல்லாவிட்டால், கொடுக்கல் வாங்கலில் பிரச்சினையுள்ள பகுதிகளை தௌிவுபடுத்துவதை ஒதுக்கிவிட்டு, வேறு விடயங்களை நோக்கி மக்களின் கவனத்தை திருப்புவதற்கு முயற்சிக்கப்படுகிறதா?