மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

இந்திய மக்களவைத் தேர்தலின் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

by Bella Dalima 07-05-2024 | 7:03 PM

India: இந்திய மக்களவைத் தேர்தலின் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (07)  நடைபெற்றது. 

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான 3 ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. 

10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களிலில் 94 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

கர்நாடகா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப் பதிவு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இன்று நடைபெற்ற தேர்தலில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, டிம்பில் யாதவ், சிவராஜ் சிங் சவுகான், உள்ளிட்ட 1,352 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதனிடையே,  வாக்களிப்பதற்காக வருகை தந்த பாரதப் பிரதமர்  நரேந்திர மோடியை குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் அஹமதாபாத் கிழக்கு தொகுதிக்குட்பட்ட  வாக்குச்சாவடியில் பாரதப் பிரமதர்  தமது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

வன்முறை இல்லாத தேர்தல் இதுவெனவும் சிறப்பாக பணியாற்றிய தேர்தல் ஆணையாளருக்கு தமது பாராட்டுகளையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

உலகின் ஜனநாயக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியாவின் தேர்தல் நடைமுறையுள்ளதாகவும் 64 நாடுகளில் இந்தத் தேர்தல் நடைமுறை உள்ளதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இன்று மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 60.19% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாநில வாரியாக விபரங்கள்:

அசாம்: 74.86%
பீகார்: 56.01%
சத்தீஸ்கர்: 66.87%
கோவா: 72.52%
குஜராத்: 55.22%
கர்நாடகா: 66.05%
மத்தியப் பிரதேசம்: 62.28%
மகாராஷ்டிரா: 53.40%
உத்தரப் பிரதேசம்: 55.13%
மேற்கு வங்காளம்: 73.93% 

7 கட்டங்களாக நடைபெறும் பாரதத்தின் மக்களவைத் தேர்தலின் 4 ஆம் கட்டம் இம்மாதம் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.