பிரேசிலில் கனமழை: 39 பேர் பலி, 68 பேரை காணவில்லை

பிரேசிலில் கனமழை: 39 பேர் பலி, 68 பேரை காணவில்லை, 24,000 பேர் இடம்பெயர்வு

by Bella Dalima 04-05-2024 | 5:49 PM

Brazil: பிரேசிலின்   Rio Grande do Sul மாநிலத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் 39 பேர் உயிரிழந்துள்ளதுடன், 68 பேர் காணாமல் போயுள்ளனர். 

பிரேசிலில் பெய்த வரலாறு காணாத மழையால் ஆயிரக்கணக்கானோர் தமது வீடுகளை விட்டு வௌியேறியுள்ளனர். 

கடந்த வியாழக்கிழமை Bento Goncalves மற்றும் Cotipora நகரங்களுக்கு இடையில்  நீர் மின் நிலையம் உள்ள அணை உடைப்பெடுத்ததில்,  Taquari ஆற்றின் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள நகரங்கள் நீரில் மூழ்கின. 

Rio Grande do Sul  மாநிலத் தலைநகரான Porto Alegre-வில் இருந்து 50 மைல் (80 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள Feliz நகரில், ஆற்று நீர் பாலம் ஒன்றை அடித்துச்சென்றுள்ளது. 

இதனால், குறித்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 24 ,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

மாநிலத்தின் பல பகுதிகளில் மின்சாரம், தொலைத்தொடர்புகள் மற்றும் நீர் விநியோகம் என்பன துண்டிக்கப்பட்டுள்ளன. 

இணையத்தள மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் இன்மையால், மக்கள் அண்டை மாநிலங்களில் உள்ள தமது உறவினர்களை தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். 

பல வீடுகளின் மேற்கூரையில் குழந்தைகளுடன் பலர் உதவிகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தெற்கு பிரேசிலில்  235 நகராட்சிகள் நீரில் மூழ்கியுள்ளன.