மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக தமிழகத்தில் கறுப்புக் கொடி போராட்டம்

by Bella Dalima 28-02-2024 | 7:01 PM

Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் (Sea Of Sri Lanka) அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் சிலருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கறுப்புக் கொடி போராட்டம்  இன்று முன்னெடுக்கப்பட்டது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே இந்த போராட்டம் இடம்பெற்றது. 

அகில இந்திய மீனவர் காங்கிரஸின் ஏற்பாட்டில் புதுக்கோட்டையில் கறுப்புக் கொடி போராட்டம் இன்று இடம்பெற்றது. 

தமிழகத்தில் நேற்றும் இன்றும் நடைபெற்ற நிகழ்வுகளில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டுள்ள நிலையில், மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தமிழக ஊடங்கள் செய்தி வௌயிட்டுள்ளன.

 இதேவேளை, 'என் மண் - என் மக்கள்' பாத யாத்திரையின் இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழகத்திற்கு விஜயம் செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடி மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு நேற்று  சென்று சிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டார். 

இதன் போது கச்சத்தீவை மீட்பதற்கு பிரதமர் மோடி தலையீடு செய்ய வேண்டும் என மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பாரத பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதனிடையே, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் நேற்று சந்தித்து கலந்துரையாடினர். 

தமிழக மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தார்

தமிழக முதலமைச்சர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பரிந்துரை செய்து இலங்கை அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், இந்திய மீனவர்களுக்கு தமது பகுதியிலேயே மீன் பிடிப்பதற்கான பொறிமுறையொன்றை ஸ்தாபிக்க வேண்டும் எனவும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் திட்டங்களை வகுக்க வேண்டுமெனவும் இதன்போது தமிழக முதலமைச்சரிடம் மீனவர்கள் வலியுறுத்தியதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.