Colombo (News 1st) மருந்து விநியோகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மருந்து கொடுக்கல் - வாங்கலில் முன்னெடுக்கப்பட்ட நடைமுறை தொடர்பில் இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய ஹியூமன் இமியுனோகுளோபியூலின் மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாக முன்னாள் பணிப்பாளர்களிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட மருந்து நிறுவனங்கள் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய மருந்து விநியோகம் தொடர்பில், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கலந்துரையாடலில் இம்யூனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், விசாரணைகள் முன்னெடுப்பது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை மீண்டும் பெற்றுக்ெகாள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்டோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.