இஸ்ரேல்-ஹமாஸ் போருடன் தர்பூசணிக்கு என்ன தொடர்பு?

இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கும் தர்பூசணிக்கும் என்ன தொடர்பு?

by Bella Dalima 18-01-2024 | 4:09 PM

Colombo (News 1st) கடந்த 3 மாதங்களாக பதாகைகளிலும் போராட்டக்காரர்கள் அணிந்திருக்கும் டி-சர்ட்களிலும் பலூன்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தர்பூசணி Emoji இடம்பெற்று வருகிறது. 

வெட்டப்பட்ட தர்பூசணியின் முக்கோண வடிவிலான Emoji இஸ்ரேல்- பாலஸ்தீன போரில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் குறிப்பதற்கு ஆதரவாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகின்ற வார்த்தைகள் பரிசோதிக்கப்பட்டு, அவை மற்றவர்களுக்கு காண்பிக்கப்படுவது மட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த நிரலை (algorith) முறியடிக்க தர்பூசணி  Emoji -ஐ ஆதரவாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

பாலஸ்தீன கொடியில் உள்ள நிறங்கள் இந்த தர்பூசணியிலும் உள்ளது. சிவப்பு, பச்சை, வெள்ளை மற்றும் கருப்பு ஆகியவை முறையே தர்பூசணியின் மையப்பகுதி, வெளிப்புறம், விதைகள் ஆகியவற்றில் தென்படுகின்றன. 

தர்பூசணியைக் குறியீடாக பயன்படுத்துவதற்கு ஒரு வரலாறும் உண்டு. 

1967 போரின்போது பாலஸ்தீன கொடி காட்சிப்படுத்தப்படுவதை இஸ்ரேல் ஒடுக்கியது. 1980-ல் மூன்று ஓவியர்கள் அரசியல் ஓவியத்தைக் காட்சிப்படுத்தினர். அதில் பாலஸ்தீன கொடியின் நிறங்கள் இருந்ததால் காட்சி முடக்கப்பட்டது.

அந்த நிறங்கள் அவர்கள் வரைந்திருந்த தர்பூசணியில் இருந்ததைக் குறிப்பிட்டு அதிகாரி அவர்களுக்கு எதிராக அறிக்கை அனுப்பினார். 

அதன் பின்னர், மக்கள் பொது இடங்களில் போராடும் போது தர்பூசணியை குறியீடாக பயன்படுத்தத் தொடங்கினர். தர்பூசணி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட சம்பவங்கள் கூட நடந்ததாக தெரிகிறது.

 



Source: Dinamani

செய்தித் தொகுப்பு