.webp)

Colombo (News 1st) கிரிஷ் கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவை நடைமுறைப்படுத்துவதை தடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை நேற்று(18) பிறப்பித்தது.
சந்தேகநபரான நாமல் ராஜபக்ஸவிற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் கடந்த நவம்பர் 3ஆம் திகதி வழங்கப்பட்ட பிணை உத்தரவு குறைபாடுகளுடனானது என தெரிவித்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோதே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பிணை உத்தரவை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்த நீதிபதி, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பவும் உத்தரவிட்டார்.
அதற்கமைய, பிரதிவாதிகள் தரப்பின் ஆட்சேபனைகளை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதியும் மனுதாரர் தரப்பின் ஆட்சேபனைகளை எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதியும் சமர்ப்பிப்பதற்காக நீதிபதி திகதி நிர்ணயித்தார்.
குறித்த மனு எதிர்வரும் பெப்ரவரி 05ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
