சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் நடவடிக்கை

கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

by Staff Writer 08-11-2026 | 5:25 PM

COLOMBO (News 1st) கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கொழும்பு மாநகர மேயர் வ்ராய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார். 

அத்துடன் கொழும்பு நகரில் உள்ள வடிகால் கட்டமைப்புகளை சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பு நகரிலுள்ள வடிகால் கட்டமைப்பு பல வருடங்களுக்கு முன்னர் அமைப்பட்டதாகவும், எனவே, அந்தக் கட்டமைப்பு பொதுவாக 30mmஇற்கும் அதிகமான மழைவீழ்ச்சித் திறனை தாங்குவதில்லை எனவும் அவர் நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இதனால் கொழும்பு நகரிலுள்ள கழிவுநீரை வௌியேற்றும் கட்டமைப்பு 30mm அளவிலான மழைவீழ்ச்சியையே தாங்கக்கூடிய திறன் கொண்டதாகவும், 2014 ஆம் ஆண்டிற்கு பின்னர் அமைக்கப்பட்ட வடிகால்கள் மாத்திரமே 100 mm மழைவீழ்ச்சியை தாங்கும் திறனைக் கொண்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர மேயர் தெரிவித்தார்.

நகரில் உள்ள இந்த வடிகால் கட்டமைப்பு முழுமையாக மாறவேண்டும் எனவும் அவற்றை பகுதிகளாகவே செய்ய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சில வடிகால் கட்டமைப்புகளின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவற்றில் முன்னேற்றங்கள் தொடர்பில் தொடர்ந்தும் மேற்பார்வை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் கொழும்பிலுள்ள சட்ட விரோத கட்டுமானங்கள் தொடர்பில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களுடன் கலந்துரையாடி, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் கொழும்பு மாநகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.